Published : 11 Sep 2022 03:29 PM
Last Updated : 11 Sep 2022 03:29 PM
பாரமுல்லா: இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு அவர் நடத்திய முதல் பொதுக்கூட்டம் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரமுல்லா மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். மேலும், அப்னி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 8 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவாக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், இன்னும் 10 நாட்களில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக குலாம் நபி ஆசாத் நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி இருந்தார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு பிராந்தியத்தின் 35 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், தான் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தனக்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் தற்போது 4 மடங்கு ஆதரவு பெருகி இருப்பதாகவும் அவர் கூறினார்.
தான் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் உருது வார்த்தைகளைக் கொண்டதாகவோ அல்லது சமஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டதாகவோ இருக்காது என்றும், மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக அது இருக்கும் என்றும் கூறி இருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான நில உரிமையை மீட்டுத் தருவது, மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஆகியவற்றில் தனது புதிய கட்சி கவனம் கொடுக்கும் என குலாம் நபி ஆசாத் கூறி இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கடந்த மாதம் 26ம் தேதி கட்சியில் இருந்து விலகினார். அப்போது, சோனியா காந்திக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில், "பெயரளவுக்கு மட்டுமே நீங்கள் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள். முடிவுகள் அனைத்தையும் ராகுல் காந்தியும் அவரது பாதுகாவலர்களுமே எடுக்கிறார்கள். கட்சியில் மூத்த தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் இல்லை. மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவுகள் எடுக்கும் கலாச்சாரத்தை ராகுல் காந்தி சீரழித்துவிட்டார்" என்று கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT