Published : 05 Jun 2014 01:58 PM
Last Updated : 05 Jun 2014 01:58 PM
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் உறுதியானது, இரண்டு விஷயங்களை உணர்த்துகின்றன.
ஒன்று, அமெரிக்க பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணுவதில் மோடி கவனமாக இருக்கின்றார் என்பது. மற்றொன்று, இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய வேண்டும் என அதிபர் ஒபாமாவும் விரும்புகிறார் என்பது.
செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டி, அதில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் அமெரிக்க அதிபரை சந்திக்க வர வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இத்தகைய சந்திப்புகளை அமெரிக்க அதிகாரிகள் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் பல்வேறு நாடுகளுக்கு அதிபருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவர் என்பதால் இந்த கெடுபிடி கடைபிடிக்கப்பட்டது.
ஆனால், கடந்த வருடம் இந்த கெடுபிடியை சற்றே தளர்த்தினர் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள். இதனால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க முடிந்தது. இருப்பினும், கடைசி நேரம் வரை சந்திப்பிற்கான சரியான தருணத்தை அமைத்துக் கொடுக்க முடியாததால் இரு நாட்டு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. மாறாக அதிகாரிகளுடன் இணைந்தே சந்திப்பு நடைபெற்றது. ஆனாலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர் ஒரு மாதத்துக்குப் பின்னர் ஒபாமாவை சந்தித்தார்.
இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஒபாமாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே விவகாரத்தால் கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. கோப்ரகடே மீதான கைது நடவடிக்கையும், அவர் கைது செய்யப்பட்ட விதமும் வெளியுறவு அதிகாரிகள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை வெகுவாகவே எரிச்சல் அடையச் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கான சலுகைகள் திரும்பப்பெறப்பட்டன. ஆனால், இது போன்ற கசப்பான அனுபங்களை இப்போதைக்கு புறம்தள்ளி வைப்பது நல்லது.
இது, இந்தியா - அமெரிக்கா உறவை புதுப்பிக்கும் தருணம். சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, அணுசக்தி கொள்கை, பாதுகாப்பு உடன்பாடுகள் ஆகிய பல்வேறு துறைகளில் முடிவுகள் எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த வார இறுதியில், வெளியுறவு இணைச் செயலர் நிஷா பிஸ்வால் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இது, இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் மேனனும் இந்தியா வரவுள்ளார். அவரும் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்புகள், செப்டம்பரில் நடைபெறவுள்ள ஒபாமா - மோடி சந்திப்புக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பயணத்திற்குப் பின்னர், மோடி வரிசையாக வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார். பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு, பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு ஆகிய மாநாடுகளில் அவர் பங்கேற்கவிருக்கிறார்.
மோடி வெளிநாட்டுப் பயணத்தைப் போல், வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய விஜயம் பட்டியலும் இருக்கிறது. சீன அதிபர் சி பிங், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபெட் ஆகியோர் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT