Published : 18 Oct 2016 01:02 PM
Last Updated : 18 Oct 2016 01:02 PM
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமாயண அருங்காட்சியகம், ராமலீலா பூங்கா அறிவிப்புகளை முன்வைத்து பாஜக, சமாஜ்வாதி கட்சி விளம்பரம் தேடுவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த சில நாட்களிலேயே அயோத்தியில் ராமலீலா பூங்கா நிறுவப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
இந்நிலையில், இந்த இரண்டு அறிவிப்புகள் தேர்தல் ஆதாயத்துக்கான முயற்சி என விமர்சித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி.
மாயாவதி கூறியதாவது:
"பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் அரசியலையும் மதத்தையும் தொடர்புபடுத்துகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த சில நாட்களிலேயே அயோத்தியில் ராமலீலா பூங்கா நிறுவப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
இந்த இரண்டு அறிவிப்புகளும் வெளியாகியிருக்கும் கால நேரத்தை நாம் கவனிக்க வேண்டும். இரண்டு கட்சிகளுமே அயோத்தியை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த திட்டத்தை இரண்டு கட்சிகளுமே முன்னரே அறிவித்திருந்தால் கேள்விகளுக்கே இடமிருந்திருக்காது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவர்கள் இதனை அறிவித்திருக்கின்றனர்.
மேலும், ராமஜென்பூமி - பாபர் மசூதி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வேளையில் இந்த புதிய திட்டங்களால் வேறு பிரச்சினைகள் எழாமல் கவனமாக செயல்பட வேண்டியதை இரு தரப்பும் உணர வேண்டும்.
பாஜகவும் சரி, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும் சரி இருவருமே அவரவர் அறிவித்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக எதுவுமே பேசவில்லை. எனவே இரண்டு கட்சிகளுமே 'கீழ்த்தரமான விளம்பரத்துக்காகவே' இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT