Published : 10 Sep 2022 09:04 PM
Last Updated : 10 Sep 2022 09:04 PM

ராணி மறைவு: இங்கிலாந்து பிரதமரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் | கோப்புப் படங்கள்

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, அந்நாட்டு பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸும் இன்று தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது, லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்வானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு முன் இங்கிலாந்தின் வர்த்தகத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்த லிஸ் ட்ரஸ், அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியளித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030-க்குள் நிறைவேற்ற வேண்டிய இந்தியா - இங்கிலாந்து இடையேயான செயல்திட்டங்களின் தற்போதைய நிலை, தடையற்ற வர்த்தக உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களிடையேயான நேரடி உறவு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து அரச குடும்பத்திற்கும், இங்கிலாந்து மக்களுக்கும் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு கடந்த வியாழக்கிழமை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இங்கிலாந்து மக்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய தலைவராக அவர் விளங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். தனது இங்கிலாந்து பயணத்தின்போது 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ராணி இரண்டாம் எலிசபெத் உடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அப்போது அவர் அளித்த அன்பான வரவேற்பை ஒருபோதும் மறக்க முடியாது என தெரிவித்திருந்தார். மேலும், அவரது திருமணத்தின்போது மகாத்மா காந்தி பரிசா அளித்த கைக்குட்டையை தன்னிடம் ராணி காண்பித்ததையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x