Published : 10 Sep 2022 12:41 PM
Last Updated : 10 Sep 2022 12:41 PM
நியூயார்க்: உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் முதல் மாநாடு ஐ.நா.வில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர் கரம்பீர் கங் நீதி கோரி ஆற்றிய நெகிழ்ச்சியான உரை உலகின் மூலைமுடுக்குகளிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி 10 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ், தாஜ் ஹோட்டல் என 10 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மும்பை தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் கரம்பீர் கங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதிலிருந்து: அன்றைய தினம் இந்த ஒட்டுமொத்த உலகமுமே என் நாட்டின் மீதும் நான் வேலை பார்த்த மும்பை தாஜ் ஹோட்டலின் மீதும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பார்த்தது. நான் அப்போது அந்த ஹோட்டலில் பொது மேலாளராக இருந்தேன். அங்கு மூன்று நாட்கள் இரவு பகலாக தாக்குதல் நடந்தது. 34 உயிர்கள் பலியாகின. அதில் என் மனைவியும், இரண்டு மகன்களும் அடங்குவர். அவர்கள் ஹோட்டலுக்குள் மாட்டிக் கொண்டனர். அவர்களால் வெளியே தப்பிவர முடியவில்லை. அந்தத் தாக்குதலில் நான் அனைத்தையுமே இழந்தேன். எங்களது ஊழியர்கள் பலரையும் இழந்தோம்.
அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவருமே தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஆனால் அந்தத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவர்கள், அந்தத் தாக்குதலை திட்டமிட்டவர்கள் அதற்கு நிதி உதவி செய்தவர்கள் முழு திட்டத்தையும் ஒருங்கிணைத்தவர்கள் என அனைவருமே சுதந்திரமாக இருக்கிறார்கள். மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் துணிச்சலுடன் சில விருந்தினரைக் காப்பாற்றினர். அதற்காக எங்களுக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், 14 ஆண்டுகள் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. வேதனையுடன் இருக்கிறோம். இன்று நான் இந்த ஐ.நா. அரங்கில் நின்று கொண்டு சர்வதேச சமூகத்திற்கு கோரிக்கை விடுக்கிறேன்.
பயங்கரவாத தாக்குதலில் ஒட்டுமொத்தமாக சேதமடைந்த ஹோட்டலை நாங்கள் வெறும் 21 நாட்களிலேயே சீராக்கினோம். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்த்து செயல்பட்டோம். சர்வதேச நாடுகளும் நீதியை நிலைநாட்ட இணைந்தே செயல்பட வேண்டும் என்று கோருகிறேன். ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடம் இவ்வுலகில் ஏதுமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT