Published : 09 Sep 2022 05:01 PM
Last Updated : 09 Sep 2022 05:01 PM
அகமதாபாத்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவரது வீரமரணத்திற்காக ராணுவம் வழங்கிய ‘சவுர்யா சக்ரா’ விருதை ஏற்க மறுத்துள்ளனர். இந்த விருதை ராணுவம் சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தபாலில் அனுப்பி உள்ளது. அதனால், இந்த விருதை அவரது குடும்பத்தினர் திரும்பக் கொடுத்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பொறுப்பில் பணியாற்றியவர் கோபால் சிங். அவர் உயிரிழந்தபோது அவருக்கு 33 வயது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2017-ல் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு அவரது வீரமரணத்தை போற்றும் வகையில் விருது கொடுக்கப்பட்டது. அதனைதான் இப்போது அவரது குடும்பம் ஏற்க மறுத்துள்ளது.
“விருதை ராணுவம் தபாலில் அனுப்பி இருக்கக் கூடாது. இது ராணுவ வழக்கத்தை மீறிய செயல் மட்டுமல்ல, ராணுவ வீரரின் வீரமரணத்தையும், அவரது குடும்பத்தையும் அவமதிக்கும் செயலாகும். அதனால்தான் இந்த விருதை ஏற்க முடியாமல் ராணுவத்திடம் திரும்ப தருகிறோம்.
குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் நாட்டின் குடியரசுத் தலைவர் கொடுக்க வேண்டிய விருது. அது முடியவில்லை எனில், மூத்த ராணுவ அதிகாரி ராணுவ வீரரின் குடும்பத்திடம் விருதை கொடுத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார், ராணுவ வீரரின் தந்தை முனிம் சிங். செப்டம்பர் 5-ம் தேதியன்று இந்த விருது திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் என்.எஸ்.ஜி படையில் கோபால் சிங் பணியாற்றியுள்ளார். அதற்காக அவருக்கு விஷிஸ்ட் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. சவுர்யா சக்ரா விருது ராணுவத்தின் மூன்றாவது உயர்ந்த விருதாகும். அசோக சக்ரா மற்றும் கீர்த்தி சக்ரா முதல் இரண்டு விருதுகளாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT