Published : 09 Sep 2022 06:49 AM
Last Updated : 09 Sep 2022 06:49 AM
புதுடெல்லி: இந்தியாவில் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல் அறிந்த வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பதவியேற்றது. கடந்த 2014 செப்டம்பரில் ‘இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை மத்திய அரசுஅறிவித்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை சார்ந்த ஆயுதங்கள், தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறைக்கப்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக இந்தியாவில் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வரும் 2026-ம் ஆண்டில் முப்படைகளிலும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை கணிசமாககுறையும். ராணுவம், கடற்படை,விமானப்படையில் பயன்பாட்டில்உள்ள இலகுரக ஹெலிகாப்டர்களில் 80 சதவீதம் 30 ஆண்டுகளைகடந்துவிட்டன. பழைய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதால்கடந்த 2017 முதல் இதுவரை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்துகளில்31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து காமோவ்-226டி வகை ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அசு திட்டமிட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணத்தால் இழுபறி நீடிக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்களின் ஆயுள்காலம் முடிவடைவதால் அவை விமானப்படையில் இருந்து படிப்படியாக நீக்கப்பட உள்ளன. அதற்குபதிலாக உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தை அதிக அளவில் விமானப்படையில் சேர்க்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனம் ஆண்டுக்கு 8 தேஜாஸ் போர் விமானங்களை மட்டுமே தயாரிக்கிறது. இது போதுமானது கிடையாது. வரும்2030-ம் ஆண்டில் விமானப்படையில் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
உக்ரைன் போரால் ரஷ்யாவிடம் இருந்து போர் தளவாட உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ராணுவத்திலும் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
கடற்படையில் சேவையாற்றும் நீர்மூழ்கி கப்பல்களுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் உள்நாட்டு உதிரி பாகங்களின் உற்பத்தி போதுமானதாக இல்லை.
சீனா, பாகிஸ்தான் என இருமுனை போர் அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது. எனவே முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT