Published : 08 Sep 2022 02:26 PM
Last Updated : 08 Sep 2022 02:26 PM

பாஜக ஆதரவாளர் விமர்சனம்: நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்த பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி: பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவாளராக இருப்பதாக தன்னை விமர்சித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

முன்னதாக நிதிஷ் குமார், "பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு பாஜகவுடன் இருப்பது தான் விருப்பமும் கூட. ஆனால், பிஹாரில் 2005க்குப் பின்னர் நாங்கள் என்னவெல்லாம் மேம்பாட்டுப் பணிகளை செய்துள்ளோம் என்று பிகேவுக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் விளம்பரம், அறிக்கைகள், பிரச்சார உத்திகள். அதை மட்டும் வைத்துக் கொண்டு அவர் உள்ளூர் அரசியல் பற்றி உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் இதே பிகே என்னுடன் ஆதரவாளராக வந்தார். நான் அவர் பார்த்துவந்த தேர்தல் உத்தியாளர் வேலையைவிட்டுவிட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் முழுநேர தொண்டராக இணையுமாறு கூறினேன். முடியாது என்று பிரிந்து சென்றார். அப்புறம் நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளுக்கும் வேலை பார்க்க ஆரம்பித்தார். அரசியல் அவருக்குத் தொழில்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலையில் பிரசாந்த் கிஷோர் சில புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், நிதிஷ் குமார், பாஜகவுடன் இணக்கமாக இருந்தபோது அவர் பிரதமருக்கு கும்பிடுபோட்ட படங்களைத் தொகுத்துப் பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டார்.

ஆனால், அந்தப் படங்களுடன்ன், "பிஹாரில் முன்பு ஆளுங்கட்சியுடன் இருந்த நிதிஷ் குமார், இன்று எதிர்க்கட்சியுடன் கைகோத்துள்ளார். அவர் எவ்வளவுதூரம் நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்பதையே இன்னும் கணிக்க முடியவில்லை. ஆனால் பிஹாரில் இப்போது அமைந்துள்ள புதிய கூட்டணி தேசிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே எனது கணிப்பு" என்று கூறியுள்ளார்.

2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் மெகா கூட்டணியால் முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஆனால் அதனை நிதிஷ் குமார் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்தச் சூழலில் தான் நிதிஷ் குமார் மீது பிரசாந்த் கிஷோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x