Published : 08 Sep 2022 10:17 AM
Last Updated : 08 Sep 2022 10:17 AM
சண்டிகர்: பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியை சந்தித்ததால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு 1-ம் தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். ஆனால், பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாத சம்பளம் செப்டம்பர் 5-ம் தேதி வரை வழங்கப்படவில்லை. இதனால் பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக வதந்தி பரவியது. குருப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ம் தேதி மாலை சம்பளம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்றுதான் சம்பளம் வழங்கப்பட்டது.
இது குறித்து பஞ்சாப் அதிகாரிகள் கூறியதாவது:
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. முதல் முறையாக இந்த மாதம் சம்பளம் வழங்க தாமதமானது. ஜிஎஸ்டி இழப்பீடு கடந்த ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வந்ததில் இருந்து நிதி நெருக்கடி உள்ளது.
கடந்த நிதியாண்டில், பஞ்சாப் அரசுக்கு மத்திய அரசிடமிருந்து ரூ.16,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக கிடைத்தது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு மட்டும் ஜிஎஸ்டி இழப்பீடு கிடைத்தது. தற்போது அது முடிவுக்கு வந்துவிட்டது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை தொடர வேண்டும் என்ற பஞ்சாப் அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்துக்கு ரூ.2,597 கோடி தேவை. அதனால் இந்த தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் சம்பளம் போட 15-ம் தேதி வரை ஆகலாம். இதை எப்படி சமாளிக்க போகிறோம் எனத் தெரியவில்லை. அரசு ஊழியர்கள் சம்பளமும், மின் மானியமும் இரண்டு பெரிய சுமைகளாக உள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது. இது தற்போது பஞ்சாப் அரசுக்கு மிகப் பெரிய சுமையாக உள்ளது. இந்தாண்டில் மாநிலத்தின் மின்சார மானியத்துக்கு ரூ.20,000 கோடி தேவைப்படுகிறது. கடந்த டிசம்பர் வரை வாடிக்கையாளர்களின் மின்சார கட்டணம் நிலுவைத் தொகையை ரூ.1.298 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, அதை மாநில அரசே ஏற்றுள்ளது. ஆம் ஆத்மி அரசின் இந்த நடவடிக்கையும், மாநிலத்தின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இவ்வாறு பஞ்சாப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT