Published : 07 Sep 2022 04:52 AM
Last Updated : 07 Sep 2022 04:52 AM
புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில் மணிஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் ஆக. 19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிசோடியாவின் வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.மணிஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில் சோதனை எதுவும் நடக்கவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்தது உண்மை என்று கூறி, கடந்த திங்கட்கிழமை 2 ஸ்டிங் வீடியோக்களை பாஜக வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று அமலாக்கத் துறையின் சோதனை நடந்துள்ளது. புதிய மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் பண மோசடி செய்துள்ளார்களா என்ற கோணத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT