Published : 06 Sep 2022 09:32 AM
Last Updated : 06 Sep 2022 09:32 AM
புதுடெல்லி: ஆசிரியர் தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் 14500 பள்ளிகள் பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைஸிங் இந்தியா திட்டம் (PM-SHRI) கீழ் மாடல் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றார். தேசிய கல்விக் கொள்கையின் முழு சாராம்சத்தையும் உள்ளடக்கியதாக இந்தப் பள்ளிகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது: இந்தப் பள்ளிகளில் நவீன, முழுமையான, மாற்றத்தை உண்டாக்கக் கூடிய வகையில் கல்வி கற்பிக்கப்படும். கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், கற்றலை மையப்படுத்தி கற்பித்தல் இருக்கும். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும். விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் .
தேசிய கல்விக் கொள்கையால் சமீப காலமாக கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. புதிய மாடல் பள்ளிகள் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் நன்மை பெறுவார்கள்.
மத்திய அரசின் திட்டமான இது மத்திய அரசுப் பள்ளிகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படும். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பள்ளிகள் மற்ற பள்ளிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் போல் தங்களின் பள்ளியும் தரம் உயர வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும்.
இந்தப் பள்ளிகளின் இலக்கு, தரமான கல்வி, பக்கவாட்டு வளர்ச்சியை உறுதி செய்வது மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளை முழுமையாக தயார்படுத்துவதும் ஆகும். கேள்வி கேட்கத் தூண்டும் வகையில், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கற்பித்தல் அமையும். அடிப்படை வகுப்புகளில் விளையாட்டு மூலம் கல்வி ஊக்குவிக்கப்படும். மாணவர்களின் தர நிர்ணயம் அவர்கள் கருத்துகளை உள்வாங்கி அந்த அறிவை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பொருத்து வழங்கப்படும். பள்ளிகளில் நவீன கட்டமைப்பு, சோதனைக் கூடங்கள், ஸ்மாட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு சாதனங்கள், கலை அரங்குகள் இருக்கும். மேலும் பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக நீர் வளத்தைப் பேணுதல், கழிவுகளை மறு சுழற்சி செய்தல், இயற்கை முறை வாழ்வியல் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT