Published : 05 Sep 2022 08:39 AM
Last Updated : 05 Sep 2022 08:39 AM
ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், சொந்த கட்சி தொடங்கும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தனது கட்சிக்கான பெயரையும், கொடியையும் ஜம்மு காஷ்மீர் மக்கள் முடிவு செய்வர் எனவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் 50 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்ட மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு சைனிக் காலனியில் நேற்று தனது ஆதரவாளர்களின் முதல் கூட்டத்தை கூட்டினார். டெல்லியில் இருந்து திரும்பிய குலாம் நபி ஆசாத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜம்மு விமான நிலையத்திலிருந்து, கூட்டம் நடைபெறும் இடம் வரை குலாம் நபி ஆசாத்தை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டம் நடைபெறும் இடத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் குலாம் நபி ஆசாத் தொடங்கும் புதிய கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்ததில் இருந்து, ஒரு முன்னாள் துணை முதல்வர், 8 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்.பி, 9 எம்எல்ஏ.க்கள், ஏராளாமான பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், அடிமட்ட தொண்டர்கள் என ஜம்மு காஷ்மீரிலிருந்து பல தரப்பினர் குலாம் நபி ஆசாத் முகாமில் இணைந்தனர்.
இது குறித்து காஷ்மீர் முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி கூறுகையில், ‘‘ காஷ்மீரில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை குலாம் நபி ஆசாத் முதல்வராக சிறப்புடன் பணியாற்றியதை மக்கள் நன்கு அறிவர். அவர் அடுத்த முதல்வராக வருவார் என காஷ்மீர் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில், குலாம் நபி ஆசாத் தலைமையிலான கட்சி ஜம்மு காஷ்மீர் அரசியலில் உண்மையான கட்சியாக இருக்கும்’’ என்றார்.
இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஜம்மு காஷ்மீர் மக்கள் முடிவு செய்வர். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்சிக்கு இந்திய பெயரை வைப்பேன். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, மாநில மக்களுக்கு நில உரிமை, வேலைவாய்ப்பு கிடைக்க செய்வதில் எனது கட்சி கவனம் செலுத்தும்.
காங்கிரஸ் கட்சி கம்ப்யூட்டர், ட்விட்டரால் உருவாக்கப்பட வில்லை. தொண்டர்கள் சிந்திய ரத்தத்தில் உருவாக்கப்பட்டது. அந்த கட்சி தற்போது நாசமாகி விட்டது. கட்சியில் ஆலோசிக்கும் முறை என்பது ராகுல் காந்தியால் அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...