Published : 02 Oct 2016 12:00 PM
Last Updated : 02 Oct 2016 12:00 PM
காந்தி ஜெயந்தியான இன்று ஆப்பிரிக்காவில் காந்திக்கு எதிராக கல்வியாளர்கள் மூலம் கிளம்பி வரும் ஒரு வெறுப்புணர்வை கண்டிக்கும் காந்தியின் பேத்தி இலா காந்தி, மகாத்மா காந்தியின் கூற்றுகளை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறுகிறார்.
“மகாத்மா காந்தி நிறவெறி, மதவெறி, சாதிவெறி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர்” என்கிறார் காந்தியின் பேத்தி இலா காந்தி.
கானா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்த காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்று போராட்டம் எழுந்துள்ளது. ‘காந்தி மஸ்ட் கம் டவுன்’ என்ற இந்த இயக்கத்தினரும், பல்கலை கல்வியியலாளர்களும் தங்களது கோரிக்கை மனுவில், பல்கலைக் கழகத்தின் அனுமதியின்றி இந்திய தூதரகம் காந்தியின் சிலையை வைத்துள்ளது என்று கூறியதோடு, “நம் சுயமரியாதையைத் தக்கவைக்க போராடுவோம், அதனை விடுத்து வளர்ந்து வரும் யூரேசிய சூப்பர் பவரின் (இந்தியா) ஆசைகளை நாம் பூர்த்தி செய்யப் பாடுபடவேண்டிய அவசியமில்லை” என்று தங்களது பகுதியில் இந்தியாவின் தொடர்ந்த செல்வாக்கை விமர்சித்து மனுவில் கூறியுள்ளனர்.
ஆனால் கானா அரசு காந்தியின் சிலை அங்கிருப்பதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
காந்தி குறித்த விமர்சனக் கருத்துகள்:
பல்கலைக் கழக பேராசிரியர்களின் செல்வாக்கில் நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இதுவரை 1700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்த ஆரம்பகால கருத்துகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான வாதங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது தனது 24-வது வயதில் 1893-ம் ஆண்டு அவர் அங்கு சென்ற பிறகு கூறிய கருத்துகள் தற்போது எதிர்ப்புக்குள்ளாகியுள்ளன. காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்காவில் கருப்பரினத்தவரை காந்தி ‘காஃபிர்கள்’ என்றும் ‘காட்டுமிராண்டிகள்’ என்றும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பேராசிரியர் ஒருவர் தனது மனுவில், “கருப்பர்களை பற்றி இப்படிப்பட்ட கருத்தை வைத்திருப்பவரை நாம் கொண்டாடி சிலை வைப்பதா?” என்று கேட்டுள்ளார்.
அமெரிக்காவில் இதே போன்ற ஒரு இயக்கம் தோன்றியது போல் தற்போது ஜொகான்னஸ்பர்க் பல்கலைக் கழக பேராசிரியர் அஸ்வின் தேசாய் எழுதிய தனது புதிய நூலான “The South African Gandhi: Stretcher-Bearer of Empire”, காலனிய சக்திகளுக்கு ஆதரவாகத் தொண்டு புரிந்த காந்தி என்ற பொருளில் அந்த நூலில் காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் சாதி அமைப்பையும் ஆதரித்தவர் என்று அந்த நூலில் எதிர்மறை சித்திரம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி அவரது பேத்தி இலா காந்தி கூறும்போது, “சாகும்வரை இந்தியாவின் சாதி அமைப்பை காந்தி காப்பாற்ற முனைந்தார் என்பது முற்றிலும் தவறான சித்திரம், காந்தி சமூகப் படிநிலைகளை எதிர்த்தவர். நாம் இத்தகைய படிமுறைகளை ஒழிக்க வேண்டும் என்றார். தலித்துகளுக்கு தனி வாக்குரிமை என்பது சாதி அமைப்பை தக்கவைப்பதாகும் என்று வாதிட்டார்” என்றார்.
மேலும் இளம் வழக்கறிஞராக தென் ஆப்பிரிக்காவில் அவர் கூறிய கருத்துகளை வைத்துக் கொண்டு காந்தியை எடைபோடுதல் தவறு. உலகம் முழுதும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்தவர் மகாத்மா காந்தி. நலிந்தோர் உரிமைகளுக்காக போராடியவர். நெல்சன் மண்டேலா இயக்கமே காந்தியின் செல்வாக்கினால் வளர்ச்சியுற்றது என்கிறார் இலா காந்தி.
“நாம் அவரை நிறவெறியாளர் என்று கூறலாகுமா? பல கருத்துகள் இப்போது கூறப்படும் எதிர்கருத்துகளுக்கு எதிராக இருந்திருக்கும் போது ஆரம்ப காலத்தில் கூறிய ஓரிரு கருத்துகளைக் கொண்டு அவரை தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் இலா காந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT