Published : 03 Sep 2022 02:42 PM
Last Updated : 03 Sep 2022 02:42 PM
சூரத்: “குஜராத் மாநில மக்கள் ஆளும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். அதுவும் குறிப்பாக சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் மீது நடந்த தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆகையால் சூரத்தில் மட்டும் 12-ல் 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று குஜராத் சென்றார். அங்கு அவர் ராஜ்கோட் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் மனோஜ் சொரதியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விமர்சித்தார். அவர் கூறுகையில், மனோஜ் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இறைவனின் சன்னதி முன் அவர் மண்டையை உடைத்துள்ளனர். இது நம் தேசத்தின் கலாச்சாரம் இல்லை. இது இந்து கலாசாரமும் இல்லை. குஜராத்தின் கலாசாரமும் இல்லை.
இந்தத் தாக்குதல் சூரத்வாசிகளை வெகுவாகக் கோபப்படுத்தியுள்ளது. நாங்கள் சூரத்தில் ஓர் ஆய்வு செய்தோம். அதில் 12 தொகுதிகளில் 7ல் ஆம் ஆத்மிக்கு ஆதரவு உள்ளது. அவற்றில் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. இன்று மாலை நான் ஆம் அத்மி தொண்டர் தாக்கப்பட்ட அதே கணேஷ் பந்தலுக்கு சென்று ஆரத்தியில் பங்கேற்க உள்ளேன். தோல்வி பயம் வந்தால் இது மாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவது வழக்கம் தான்.
பாஜகவினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுநாள்வரை நீங்கள் காங்கிரஸை கையாண்டு வந்தீர்கள். நாங்கள் காங்கிரஸார் இல்லை. நாங்கள் சர்தார் வல்லபாய் படேல் மீதும், பகத் சிங் மீதும் நம்பிக்கை கொண்டவகள். நாங்கள் துணிந்து போராடுவோம். குஜராத்தில் ஊடகத்தை கைக்குள் போட்டுக் கொண்டு ஆம் ஆத்மியை பாஜக இருட்டிப்பு செய்ய முயல்கிறது. ஆம் ஆத்மி கட்சியினரின் பேட்டிகளை பிரசுரிக்கவோ, ஒளிபரப்பவோ கூடாது அவர்களை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடக் கூடாது போன்ற தடங்கல்களை ஏற்படுத்துகிறது. அதனால் நான் ஆம் ஆத்மி கட்சியினரிடம் சமூக வலைதளங்களில் அனல் பறக்க பிரசாரம் செய்யுமாறு கூறியுள்ளேன்" என்று கேஜ்ரிவால் கூறினார்.
24 ஆண்டு ஆட்சியை அசைப்பாரா? - குஜராத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சியை அப்புறப்படுத்துவதே தங்களின் இலக்கு என்று பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே கேஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது சூரத்தில் அளித்தப் பேட்டியில் பாஜக மீது மக்கள் எதிர்ப்பலைகள் இருப்பதைப் பற்றி பேசியுள்ளார். குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அங்கே பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவும், ஆம் ஆத்மி தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், ஹர்திக் படேல் விலகல், குஜராத் காங்கிரஸ் தலைவர் விலகல் என்று காங்கிரஸ் அங்கே திணறிக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT