Published : 03 Sep 2022 05:10 AM
Last Updated : 03 Sep 2022 05:10 AM

குஜராத்தில் கார் மோதி 6 பக்தர்கள் உயிரிழப்பு

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளான காருக்கு அருகில் திரண்டிருந்த கிராம மக்கள். படம்: பிடிஐ

அகமதாபாத்: குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பாஜி கோயில் உள்ளது. அகமதாபாத்தில் இருந்து சுமார் 185 கி.மீ. தொலைவில், ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆரவல்லி மாவட்டம், கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் காலையில் இக்கோயிலுக்கு பக்தர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியது. இதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரைவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குஜராத் முதல்வர் புபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x