Published : 03 Sep 2022 06:00 AM
Last Updated : 03 Sep 2022 06:00 AM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 22-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30-ம் தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
இந்நிலையில், தலைவர் தேர்தலில் போட்டியிட கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு சசி தரூர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சியின் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெளிப்படைத் தன்மை இருக்கும். இதைத்தான் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரியும் கேட்டுள்ளார்.
அப்படி என்றால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை இது என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரை முன்னிறுத்தலாம், யார் வாக்களிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் சசி தரூர் வலியுறுத்தி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT