Published : 03 Sep 2022 01:54 AM
Last Updated : 03 Sep 2022 01:54 AM
கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியை அமலாக்கத் துறை நேற்று விசாரணை செய்தது. நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை சுமார் எட்டுமணி நேரம் நடந்தது. விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசியபோது பாஜகவையும், அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்தார் அபிஷேக்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், “மற்றொரு கட்சியின் தலைவரை 'பப்பு' என்று பாஜக கூறுகிறது. ஆனால் உண்மையில் அமித் ஷாதான் மிகப்பெரிய 'பப்பு'. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இல்லாமல் அமித் ஷாவால் அரசியல் செய்ய முடியாது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப்புக்கு நிலக்கரி ஊழலுடன் தொடர்புள்ளது. எல்லையில் பசுக் கடத்தல் நடந்தபோது எல்லைப் பாதுகாப்புப் படை என்ன செய்து கொண்டிருந்தது. இது மாடு கடத்தல் ஊழல் அல்ல, உள்துறை அமைச்சர் ஊழல்.
நான் ஐந்து பைசா கூட சட்டவிரோதமாக வாங்கியதாக யாராவது நிரூபித்தால், தூக்குத் தண்டனை ஏற்க தயாராக இருக்கிறேன். இன்றைய விசாரணை போல் 30 முறை நடந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். விசாரணை அமைப்புகளுக்கும் நான் தலைவணங்க தயாராக உள்ளேன். ஆனால், வங்காள மக்கள், ஒருபோதும் பாஜகவுக்கு தலைவணங்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த பின் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய தேசியக் கொடியை கையிலேந்த மறுத்தது தொடர்பாக பேசிய அபிஷேக் பானர்ஜி, “வங்காள மக்களுக்கு தேசபக்தியை கற்பிக்க முயற்சிக்கும் அமித் ஷா, முதலில் தனது மகனுக்கு தேசபக்தியை கற்பிக்கட்டும். அவர் நினைத்தால் அமலாக்கத்துறையை மற்றும் சிபிஐயை கட்டவிழ்த்துவிட்டு என்னை பயமுறுத்துவார். இதுவரை என் மனைவியிடமும் என்னிடமும் ஏழு முறை விசாரித்துள்ளனர். இதன் முடிவு பூஜ்ஜியம்தான். ஆனாலும், லஞ்சம் வாங்கும் போது கேமராவில் சிக்கிய பாஜக தலைவர்களை மத்திய அமைப்புகள் ஒருபோதும் அழைக்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT