Published : 02 Sep 2022 06:27 AM
Last Updated : 02 Sep 2022 06:27 AM
புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 2017-ல் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் கொடுக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு ஏற்கெனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2 தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறிய சுகேஷ், தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சுகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்திருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசுப் பொருட்களை பெற்றுள்ளார் என குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக வரும் 26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு உத்தரவிட்டார்.
12-ம் தேதி சம்மன்
இதனிடையே, சுகேஷ் சந்திரசேகர் மீது மிரட்டி பணம் பறித்தது மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் 12-ம் தேதி ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT