Published : 02 Sep 2022 05:41 AM
Last Updated : 02 Sep 2022 05:41 AM

தேஜஸ் 2.0 போர் விமானம் தயாரிக்க மத்திய அரசு அனுமதி

இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள தேஜஸ் ரக விமானம்.

புதுடெல்லி: தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேஜஸ் 2.0 போர் விமான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தேஜஸ் எம்.கே.1 ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மொத்தம் 123 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை ஒப்பந்தம் வழங்கி உள்ளது. இதில் 30 விமானங்கள், விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக தேஜஸ் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தேஜஸ் மார்க் 2 மாதிரி விமானம் தயாராகி விடும் என்றும் வரும் 2030-ல் உற்பத்தி தொடங்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள தேஜஸ் மார்க் 1 ரக விமானம் 3 டன் எடை கொண்டதாகும். தேஜஸ் மார்க் 2 விமானம் 4 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில் அதிநவீன ஆயுதங்கள், ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள மிராஜ் 2000, ஜாகுவார், மிக் 29 ரக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.

இந்நிலையில், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியதாவது: விமானப் படையில் பழைய போர் விமானங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. அவற்றுக்குப் பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. தற்போது 30 தேஜஸ் ரக விமானங்கள் படையில் உள்ளன. தேஜஸ் மார்க் 2 ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும்போது படையின் வலிமை மேலும் அதிகரிக்கும்.

பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். போர் விமானங்கள் எல்லைப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் 8-ம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 10 ருத்ரா ஹெலிகாப்டர்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. கடந்த 2013 முதல் ருத்ரா ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 95 ருத்ரா ஹெலிகாப்டர்களை வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x