Published : 31 Aug 2022 07:43 AM
Last Updated : 31 Aug 2022 07:43 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்தவரும் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவருமான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடர்பாக அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
“ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் குழந்தைத் தனமாக செயல்படுகிறார். அவர் துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு கலந்தாலோசித்து முடிவு எடுக்கும் முறையை சீரழித்தார். எதிலும்ஆர்வம் காட்டாத ஒருவரின் கையில் கடந்த 8 ஆண்டுகளாக கட்சியின் தலைமை ஒப்படைக்கப்பட்டுள் ளது. இதுவே கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று கூறியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியை அவதூறு செய்ய ஆசாத் பணிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அவர் தன்னை தரம் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி சாடியது.
காங்கிரஸை விட்டு விலகிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸை விட்டு விலகிய ஆசாத்தை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். குலாம் நபி ஆசாத்இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸை விட்டு விலகுவதாக அறிவித்தனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் சர்மா, கரு ராம், முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் உள்ளிட்ட இத்தலைவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பல்வான் சிங் கூறும்போது, “குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக நாங்கள் காங்கிரஸை விட்டு விலகுகிறோம். நாங்கள் கூட்டாக எழுதிய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT