Published : 30 Aug 2022 05:53 AM
Last Updated : 30 Aug 2022 05:53 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த நியமனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2014-ல் 40 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 60 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 2.52 லட்சம் வழக்குகளும் அடங்கும். கரோனா பேரிடருக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 13 லட்சம் அதிகரித்துள்ளது.
நீதித் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. கடந்த 2014-ல் 984 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை, 124 அதிகரித்து தற்போது 1,108 ஆக உயர்ந்துள்ளது. நீதித் துறை சீர்திருத்தங்கள் தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளன. ஆனால், இ-பைலிங், இ-பேமன்ட், நீதிமன்ற கட்டணம், இ-சம்மன் உள்ளிட்ட நவீன நீதி வழங்கல் முறைகளை பின்பற்ற நீதித்துறை உயரதிகாரிகளும், வழக்கறிஞர்களும் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT