Published : 29 Aug 2022 05:16 AM
Last Updated : 29 Aug 2022 05:16 AM
புதுடெல்லி: விதிகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் நேற்று 9 விநாடிகளில் தரைமட்டமானது.
உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தர்மாவட்டத்தில் நொய்டா அமைந்துள்ளது. டெல்லிக்கு அருகே அமைந்துள்ள இப்பகுதி அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நொய்டாவின் ஏடிஎஸ் கிராமத்தில் எமரால்டு கோர்ட்என்ற திட்டத்தின் கீழ் அபெக்ஸ் (32 மாடி), சேயன் (29 மாடி) என 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் 857 வீடுகள் இருந்தன. இதில் 600 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்த இருகுடியிருப்புகளும் இரட்டை கோபுர கட்டிடம் என்று அழைக்கப்பட்டது.
விதிகளை மீறி கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை இடிக்க கடந்த ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 மாதங்களில் கட்டிடங்களை இடிக்க கட்டுமான நிறுவனத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு நடைமுறை காரணமாக ஓராண்டு வரை காலதாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு நேற்று கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
3,700 கிலோ வெடிபொருட்கள்: இந்தியாவின் எடிபிஸ், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெட் டெமாலிசன் நிறுவனங்களிடம் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இரு நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களும் கட்டிடங்களை ஆய்வு செய்து வாட்டர் ஃபால் இம்ப்லோஷன் தொழில்நுட்பத்தில் இடிக்க முடிவு செய்தனர்.
இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் 10,000 துளைகள் போடப்பட்டு 3,700 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. வெடிபொருட்களுக்காக மட்டும் ரூ.18 கோடி செலவிடப்பட்டது. இரட்டை கோபுர கட்டிடத்தைச் சுற்றி சுமார் 1.5 கி.மீ. தொலைவுக்குள் வசித்த சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 35 தெருநாய்களை தன்னார்வ ஆர்வலர்கள் பிடித்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
சென்னை ஐஐடி நிபுணர்கள்: எமரால்ட் கோர்ட் குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 5 ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டனர். 6 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கட்டிடத்தை இடிக்கும்போது ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுமார் 15-க்கும் மேற்பட்டகாற்று சுத்திகரிப்பான் கருவிகள் நிறுவப்பட்டன. அவசர சூழ்நிலையை சமாளிக்க தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவற்றுக்கு உரிய இழப்பீடு பெறுவதற்காக அந்தக் கட்டிடங்களின் பெயரில் ரூ.100 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டது. குடிநீர் குழாய்களுக்காக ரூ.2.5 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டது.
கட்டிடம் உடையும்போது ஏற்படும்அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை ஐஐடியைச் சேர்ந்த 10 நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
நொய்டா, கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. கட்டிடத்தை இடிக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
தமிழக அதிகாரி தலைமையில்.. - இந்த இரட்டை கோபுரம் இடிப்பின் பாதுகாப்புப் பணி நொய்டா மாநகர காவல் துறை துணை ஆணையர் ராஜேஷிடம் ஒப்படைக்கப்பட்டது கோயில்பட்டியைச் சேர்ந்த தமிழரான இந்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 550 காவலர்கள் பணியில் இருந்தனர். அப்பகுதியில் ஒருவரும் இல்லை என்பது நேற்று காலை 7 மணிக்கு உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு அதிகாரி ராஜேஷ் உத்தரவிட இடிப்பு பணி தொடங்கியது . இந்த அணியில் ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு அமர்த்தப்பட்டது. இதில் அதிகாரி ராஜேஷ் மற்றும் 6 பேர் வெடிகுண்டு நிபுணர்களாக இருந்தனர். இந்த நிபுணர்களில் இருவர் இந்தியர்கள், 4 பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.
ரூ.15 கோடிக்கு இடிபாடுகள் விற்பனை: ஏற்கெனவே திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வெடிபொருட்கள் வெடித்துச் சிதறுவதற்கான பொத்தான் அழுத்தப்பட்டது. அடுத்த 9 விநாடிகளில் இரு கட்டிடங்களும் சீட்டுக் கட்டைகள் போல இடிந்து தரைமட்டமாகின.
அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய பாதிப்புகூட ஏற்படவில்லை. கட்டிட இடிபாடுகள் 4 மாடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன. இதன் எடை 80,000 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கட்டிட கழிவுகள் ரூ.15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் கட்டிட கழிவுகள் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட உள்ளன.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. காற்று மாசுவை கட்டுப்பாடுத்த 100 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான துப்புரவுபணியாளர்கள் சம்பவ இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நொய்டா சுற்றுவட்டாரத்தில் காற்று மாசு குறைய சில நாட்கள் ஆகலாம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிடத்தை இடிப்பதற்கான முழு செலவையும் கட்டுமான நிறுவனம் ஏற்றுக் கொண்டது. மேலும் இந்த வீடுகளுக்கு செலுத்தப்பட்ட பணத்தை சூப்பர்டெக் நிறுவனம் திரும்ப ஒப்படைத்தது.
கட்டுமான நிறுவனம் விளக்கம்: சூப்பர்டெக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் நொய்டா ஆணையம் அளித்த அனுமதியின் பேரிலேயே இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டிடங்களை இடித்துள்ளோம். உலக அளவில் பிரபலமான எடிபிஸ் நிறுவனம் கட்டிடங்களை இடித்து கொடுத்திருக்கிறது.
இடிக்கப்பட்ட கட்டிடங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணத்தை திருப்பி அளித்துவிட்டோம். நொய்டா பகுதியில் இதுவரை 70,000 வீடுகளை கட்டி உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களது இதர கட்டுமான திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.500 கோடி இழப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிட இடிப்புக்கான செலவை சூப்பர்டெக் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதனால் அந்நிறுவனத்துக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT