Published : 17 Oct 2016 06:16 PM
Last Updated : 17 Oct 2016 06:16 PM

சவுமியா கொலை வழக்கு தீர்ப்பு குறித்து விமர்சித்த கட்ஜுவை விவாதத்திற்கு அழைக்கும் உச்ச நீதிமன்றம்

சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விமர்சித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை உச்ச நீதிமன்றம் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுதிய வலைப்பதிவை கவனத்தில் கொண்டு சவுமியா கொலை வழக்கில் கோர்ட் சரியா அல்லது அவர் கூற்று சரியா என்பதை நேரில் ஆஜராகி விவாதிக்க அவருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதாவது சட்டத்தில் யார் சரி? கோர்ட்டா, அல்லது கட்ஜுவா என்பதை கட்ஜு நேரில் வந்து விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

சவுமியா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டதை விமர்சித்து மார்கண்டேய கட்ஜு செப்டம்பர் 17-ம் தேதியன்று தனது வலைப்பக்கத்தில் இட்ட பதிவில், சவுமியா ரயிலிலிருந்து குதித்தார், கோவிந்தசாமி தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்த கட்ஜு “கேள்விப்பட்ட தகவலை” சாட்சியமாக நம்புகிறது கோர்ட் என்று விமர்சனம் செய்தார்.

“சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட கேள்விப்பட்ட தகவலை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அரிச்சுவடியை அறிந்தே வைத்திருப்பர்” என்று கூறியிருந்தார். மேலும் தீர்ப்பு ‘மிகப்பெரிய தவறு’ என்றும், சட்ட உலகில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நீதிபதிகளிடமிருந்து இத்தகைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் கட்ஜு வேதனை தெரிவித்திருந்தார்.

கட்ஜுவின் இந்தப் பதிவு குறித்து தாமாகவே கவனத்தில் கொண்டு வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய், பி.சி.பண்ட், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு சட்டத்தில் யார் சரி? கட்ஜுவா அல்லது கோர்ட்டா என்பதை கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது, கட்ஜு மீது தங்களுக்கு நிரம்ப மரியாதை இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், ஏன் தங்கள் தீர்ப்பு அடிப்படையில் தவறானது என்று கட்ஜு கூறுகிறார் என்பதை நேரில் உச்ச நீதிமன்றத்தில் அவருடன் விவாதிக்க தயார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்ஜுவுடன் இந்த விவாதம் நடைபெறாமல் கோவிந்தசாமி தண்டனைக்குறைப்பை எதிர்த்து கேரள அரசும் சவுமியாவின் தாயாரும் செய்திருந்த தனித்தனியான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை குறித்து எந்த முடிவையும் தெரிவிப்பது ‘முறையாகாது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் முழு விவரம்:

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்தவர் சவுமியா (23). கடந்த, 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி எர்ணாகுளம்-சோரன்பூர் ரயிலில் பயணித்தபோது, கோவிந்த சாமி என்பவரால் தாக்கப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.

கோவிந்தசாமியும் சவுமியா வுடன் கீழே குதித்து, வல்லத்தோல் நகர் பகுதியில் பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்டுள்ளார். பலத்த காயங்களுடன் திரிச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட சவுமியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவ்வழக்கில், கோவிந்த சாமிக்கு எதிராக பாலியல் பலாத் காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, ஏற்கெனவே 8 வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடு படுவதை வாடிக்கையாக கொண் டிருப்பதை கருத்தில்கொண்டு, இவ்வழக்கை விசாரித்த திரிச்சூர் விரைவு நீதிமன்றம், கோவிந்த சாமிக்கு மரண தண்டனை விதித்து, 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

பின்னர், 2013 டிசம்பர் மாதத்தில் கேரள உயர்நீதிமன்றமும் இத் தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து கோவிந்தசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.பன்த், யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, 7 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கோவிந்தசாமிக்கு எதிராக பாலியல் பலாத்காரம், தீவிர காயம் ஏற்படும் வகையில் தாக்கி வழிப்பறி செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை உறுதி செய்த பெஞ்ச், கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x