Last Updated : 28 Aug, 2022 06:21 AM

3  

Published : 28 Aug 2022 06:21 AM
Last Updated : 28 Aug 2022 06:21 AM

ஏழை சிறுவர்களுக்கு சீருடையில் பாடம் கற்பிக்கும் காவல் உதவி ஆய்வாளர் - அயோத்தியின் ‘கல்வி குரு’ என பொதுமக்கள் புகழாரம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஏழை சிறுவர்களுக்கு சீருடையில் பாடம் கற்பிக்கிறார் காவல் துணை ஆய்வாளர் ரஞ்சீத் யாதவ். படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரை ‘வர்திகே குருஜி (கல்வித் துறவி)’ என்றழைக்கின்றனர்.

உ.பி. காவல் துறையில் கடந்த 2015-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக இணைந்தவர் ரஞ்சீத் யாதவ். அயோத்தியின் நயாகாட் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர் ரோந்து செல்லும்போது, கண்களில்பட்ட காட்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, கோயில்களில், மடங்களில் பிச்சை எடுப்பவர்களில் பலர் சிறுவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடனும், தனியாகவும் பிச்சை எடுப்பதைப் பார்த்துள்ளார் ரஞ்சீத்.

அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளித்து பள்ளிகளில் சேர்க்க விரும்பியுள்ளார். இதை அவர்களிடம் வெளிப்படுத்த முயன்றபோது, அவர் ஒரு போலீஸ் என்பதால் பலரும் ஓடி ஒளிந்துள்ளனர். எனினும், விடாமல் அவர்களை நெருங்கிய அவர், மெல்லப் பழகி, மனங்களை மாற்றியுள்ளார். இதில் திருந்தி வாழ விரும்பிய அவர்கள், சரயு நதிக்கரையின் மரத்தடியில் ரஞ்சீத் தொடங்கிய வகுப்புகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். தனது அன்றாட காவல் பணிக்கும் முன்பாக காலை 7.00 மணி முதல் 9.00 வரை அந்த வகுப்புகளை நடத்தியுள்ளார் ரஞ்சீத்.

கடந்த வருடம் செப்டம்பர் முதல் தொடங்கிய இந்த வகுப்புகளில் இந்தி, கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். இதன் பலனாக பல சிறுவர்களும், சிறுமிகளும் இந்தி, ஆங்கிலத்தை ஓரளவுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர்.

மேலும் சிலர் அடிப்படைக் கணிதத்தையும் கற்றுக் கொண்டனர். இதனால், அவர்களில் சிலருக்கு நேரடியாக அயோத்தியின் அரசு பள்ளிகளில் 3 முதல் 5 வகுப்புகள் வரை சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சீருடையுடன் அமர்ந்து சொல்லித்தருவதால் ரஞ்சீத்தை, ‘வர்திகே குருஜி' என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது அயோத்தியின் டிஐஜி அலுவலகத்தில் பணியாற்றும் ரஞ்சீத் யாதவ் கூறும்போது, ‘என்னிடம் தற்போது 60 சிறுவர், சிறுமிகள் பாடங்கள் கற்கின்றனர். இந்த வகுப்புகளில் விளையாட்டாக அமர்ந்தவர்களும் அதில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். எனது பணியும் தடைபடாமல் மீதி நேரங்களில் இதை செய்கிறேன். இதன்மூலம் காவல் துறைக்கும் ஒரு தனி மதிப்பு உருவாகிறது’ என்றார்.

உ.பி.யின் பழம்பெருமை வாய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார் ரஞ்சீத். இவரது சமூகப்பணியால் கவரப்பட்டு அப்பகுதிவாசிகள் பல்வேறு வகையில் உதவுகின்றனர். சிலர் அக்குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் வாங்கித் தருகின்றனர். இன்னும் சிலர் அன்றாடம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டியும் அளித்து மகிழ்கின்றனர்.

இதனால், கல்வித்துறவி எனவும் அழைக்கப்படும் ரஞ்சீத்தின் வகுப்பில் இந்து மற்றும் முஸ்லிம் என மதவேறுபாடின்றி குழந்தைகள் பயில்கின்றனர். அயோத்தியின் மடங்களிலும், கோயில்களிலும் யாசகம் எடுத்து பிழைப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இந்த வகுப்புக்கு அனுப்பத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x