Published : 28 Aug 2022 04:58 AM
Last Updated : 28 Aug 2022 04:58 AM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
சுமார் 50 ஆண்டுகளாக கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறகு கட்சியில் இருந்து வெளியேறும் மூத்த தலைவர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரும் பஞ்சாபில் அமரீந்தரை போல், ஜம்முவில் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமரீந்தர் விலகலால் பாஜகவுக்கு பஞ்சாபில் கிடைக்காத பலன், ஆசாத் விலகலால் காஷ்மீரில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இவரது கட்சி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும். அதற்குள் ஆசாத் தன் கட்சியை வலுப்படுத்தத் தீவிரம் காட்டுவார் என தெரிகிறது.
இவரது புதிய கட்சியால் காஷ்மீர் அரசியலில் பல மாற்றங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் பாஜக அதிக பலன் பெறும் சூழல் தெரிகிறது. இக்கட்சிக்கு ஜம்முவில் பெரும்பான்மை தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. காஷ்மீரில் அதன் நட்பு வளையத்திலுள்ள 2 சிறிய கட்சிகளின் ஆதரவுடன், பாஜக ஆட்சி அமைக்க பாதை வகுக்க முயல்கிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டில் பறிக்கப்பட்டது. இதனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் அதிருப்தி நிலவுவதாகக் கருதப்படுகிறது. இந்த அதிருப்தியால் முன்னாள் ஆளும் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிடிபி உள்ளிட்டவை இணைந்து, ‘பகாட் (பிஏஜிடி)’ கூட்டணியின் பெயரில் பாஜகவை எதிர்க்கின்றன. காங்கிரஸ் இதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. இங்கு இந்துக்கள் மிகவும் குறைவு என்பதால், பாஜகவுக்கு காஷ்மீரில் செல்வாக்கு இல்லை.
எனினும், காஷ்மீரின் சிறிய கட்சிகளான அல்தாப் புகாரியின் அப்னி பார்ட்டி (நமது கட்சி) மற்றும் சஜாத் லோனின் கட்சிகள் பாஜகவின் திரைமறைவு நண்பர்களாகக் கருதப்படுகின்றன. இவர்களுக்கு காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட சிறிய எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால், ஜம்முவில் அதிகமுள்ள இந்துக் களில் ஒருபகுதியினரிடமும் பாஜகவுக்கு எதிர்ப்பு உள்ளது. இவர்களை காங்கிரஸ் பக்கம் செல்லாமல், ஆசாத்தின் கட்சி தடை ஏற்படுத்தினால் பாஜகவுக்கு பலன் கிடைக்கும்.
ஜம்முவின் சினாப் பகுதியை சேர்ந்தவர் ஆசாத். இதன் காரணமாக அவருக்கு ஜம்மு அளவுக்கு காஷ்மீரில் செல்வாக்கு இல்லை. இவர் ஜம்முவிலுள்ள உதாம்பூரில் கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். இதற்கு அவர் காங்கிரஸில் இருந்ததே காரணமானது.
இந்நிலையில், ஆசாத்தின் விலகல் என்பது ஜம்முவில் காங்கிரஸை சரிபாதியாக உடைத்துள்ளது. இதனால், ஆசாத்தின் தனிக் கட்சியால், ஜம்முவில் பாஜக விற்குள்ள பலன் கூடும் வாய்ப்புகளும் உள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் உருவான பகாட் கூட்டணியில் எதிரும், புதிருமாக இருந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும், பிடிபியின் மெஹபூபா முப்தியும் ஒன்றாகி உள்ளனர். இதன் சார்பில் தேர்தலிலும் எளிதாக வென்று ஆட்சி அமைக்கும் நம்பிக்கை இருந்தது.
இவர்களுக்கு குறையும் தொகுதிகளை காங்கிரஸ் அளிக்கும் வாய்ப்புகளும் நிலவின. இதனிடையே, ஆசாத் காங்கிரஸில் இருந்து வெளியேறி அவர்கள் கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால், காஷ்மீரில் காங்கிரஸும் புதிய வியூகத்தை அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT