Published : 16 Oct 2016 11:08 AM
Last Updated : 16 Oct 2016 11:08 AM
புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமி தரிசனத்துக்காக 20 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. மேலும் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் இம்மாதத்தில் நாடு முழுவதும் இருந்து திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வாடிக்கை. இந்த சூழலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், வெள்ளிக்கிழமை இரவு முதலே திருமலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர். இதனால் சர்வ தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி, 2 கி.மீ தூரத்துக்கு வெளியேவும் வரிசை காணப்பட்டது. இதையடுத்து வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி, பால், குடிநீர் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
தீபாவளி ஆஸ்தானம்
தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதேபோல் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நவம்பர் 26-ல் கொடியேற்றமும், முக்கிய நிகழ்வான தங்கத் தேர் பவனி டிசம்பர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT