Published : 28 Aug 2022 02:09 AM
Last Updated : 28 Aug 2022 02:09 AM
புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து 134 முன்னாள் அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்ட 134 முன்னாள் அரசு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், "நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில் குஜராத்தில் நடந்ததைக் கண்டு நாங்கள் திகைக்கிறோம். பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலை தேசத்தை சீற்றம் அடையச் செய்துள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாலும், இந்த கொடூரமான தவறான முடிவைத் திருத்துவதற்கான முதன்மை அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புவதால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
இந்த வழக்கு அரிதானது, ஏனென்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கவும் குற்றத்தை மறைக்கவும் சாட்சியங்களை அழிக்கவும் முயன்ற காவல்துறையினரும் மருத்துவர்களும் தண்டிக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக இந்த வழக்கை 1992ம் ஆண்டு குஜராத்தின் நிவாரணக் கொள்கையின்படி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏன் இந்த விஷயத்தில் அவசர முடிவெடுத்தது என்பதில் எங்களுக்கு குழப்பமாக உள்ளது.
குற்றவாளிகளின் விடுதலையானது பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிலும் ஏற்படுத்தும் திடுக்கிடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்துள்ள பாதிப்புகளை மனதில்கொண்டு
குஜராத் அரசு பிறப்பித்துள்ள விடுதலை உத்தரவை ரத்து செய்யுமாறும், குற்றவாளிகள் 11 பேரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு எழுதியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT