Published : 27 Aug 2022 04:19 PM
Last Updated : 27 Aug 2022 04:19 PM

‘மத மோதல்களுக்கு வாய்ப்பு’ - முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: மத ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, 'ஸ்டாண்ட் அப்' நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கியின் நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

டெல்லியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு அரங்கில் இன்று (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கியின் 'ஸ்டாண்ட் அப்' நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் டெல்லி போலீஸிடம் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. அதேவேளையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு அதே நிகழ்ச்சிக்கு தடை கோரி கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'பாக்யநகரில் நடந்த முனாவர் ஃபரூக்கி நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்துக் கடவுளரை பகடி செய்து பேசினார். இதனால் அங்கு மத ரீதியான மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆகையால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்காவிட்டால் விஎச்பி, பஜ்ரங் தல் அமைப்புகள் நிகழ்விடத்தில் போராட்டம் நடத்தும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போலீஸார் நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்தியதில் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்தால் அப்பகுதியில் மத ரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதாக போலீஸ் இணை ஆணையர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மஹூவா மொய்த்ரா கண்டனம்: இதற்கு திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'விஎச்பி முதுகெலும்பில்லாத டெல்லி போலீஸை மிரட்டி முனாவர் நிகழ்ச்சியை தடை செய்யச் செய்துள்ளது. எனது வீடு அனைத்துப் பக்கங்களிலும் சுவர்களால் மூடப்பட்டு, எனது வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருப்பதை நான் விரும்பவில்லை என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் மத நல்லிணக்கம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா என்ன? ஒரு காமெடி நிகழ்ச்சியால் இந்தியாவின் மத நல்லிணக்கம் சிதைந்துவிடுமா?’ என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த முனாவர் ஃபரூக்கி? - முனாவர் ஃபரூக்கி என்பவர் 32 வயதே நிரம்பிய ஸ்டாண்ட் அப் காமெடியன். இவரது சொந்த ஊர் குஜராத். 2002 ஆம் குஜராத் கலவரத்திற்குப் பின்னர் இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அடுத்த ஒராண்டிலேயே முனாவரின் தாய் உயிரிழந்தார். தந்தையும் நோய் வாய்ப்பட முனாவர் இளம் வயதிலேயே வேலை செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த அவர். தனியாக கிராஃபிக் டிசைனிங் பயின்றார். அது சார்ந்து சில வேலைகளையும் செய்து கொடுத்து வந்தார்.

இந்நிலையில்தான் லாக் அப் சீசன் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் முனாவர் கலந்து கொண்டார். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட முனாவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆனார். அவரை வெற்றியாளராக தேர்வு செய்தது நடிகை கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் முனாவர் ஃபரூக்கி தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை செய்தார். கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், இந்துக் கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ச்சியாக ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். முனாவர் ஃபரூக்கி நிகழ்ச்சி நடத்தும்போதெல்லாம் அவருக்கு இந்து அமைப்புகள், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்ந்து நடைபெறுகிறது.

ஹைதராபாத் நிகழ்ச்சியும் ராஜா சிங் கைதும்: இந்த நிலையில் தான் அண்மையில் ஃபரூக்கி ஹைதராபாத்தில் பாக்யநகரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதற்கு, தெலங்கானா மாநில கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்தார். "முனாவர் ஃபரூக்கி தெலங்கானா வந்தால் அவருக்குத் தக்க பாடம் புகட்டுவோம்" என்றும் மிரட்டியிருந்தார். ஆனால், முனாவர் நிகழ்ச்சி திடமிட்டபடி நடந்தது. அதில், அவர் இந்து கடவுளரை அவமதித்தாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜா சிங், முனாவரையும், இஸ்லாமியர்களின் இறைத்தூதரையும் பழித்து வீடியோ வெளியிட்டார். இதனால் ஹைதராபாத் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து முனாவர் ஃபரூக்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x