Published : 27 Aug 2022 06:56 AM
Last Updated : 27 Aug 2022 06:56 AM

டெல்லி வந்த சீக்கிய பத்திரிகையாளர் நியூயார்க் நகரம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னணி?

அங்கத் சிங்

ஜலந்தர்: அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பத்திரிகையாளர் அங்கத் சிங். அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ் நியூஸ் என்ற இணையதளத்துக்காக செய்திப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த3 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது இவரை போலீஸாரும், குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தி மீண்டும் அவரது நாட்டுக்கே நாடு கடத்தி, அனுப்பி வைத்தனர். அடுத்த விமானத்திலேயே அவர் நியூயார்க் அனுப்பப்பட்டதாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கத் சிங்கை நாடு கடத்துவதற்கு எந்தவிதமான காரணத்தையும் போலீஸார் தெரிவிக்கவில்லை என்று அவரது தாய் குர்மீத் கவுர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள எனது மகன் அங்கத் சிங், 18 மணி நேர பயணம் செய்து இந்தியாவுக்கு வந்தார். பஞ்சாபிலுள்ள எங்களைப் பார்ப்பதற்கு அவர் பயணம் மேற்கொண்டார். ஆனால் அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அடுத்த விமானத்திலேயே அவர் நியூயார்க் அனுப்பப்பட்டார். இதற்கு அவர்கள் எந்தக் காரணமும் கூறவில்லை. ஆனால், விருது பெற்ற அவருடைய பத்திரிகைதான் அவர்களை பயமுறுத்துகிறது என்பதை நான் அறிவேன். அவர் வெளியிட்ட செய்திப்படங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஒரு சீக்கியராக, அதற்கும் மேல் ஒரு பத்திரிகையாளராக, உண்மை மற்றும் நீதியின் போராளியாக இருப்பது எளிதல்ல. உண்மை பேசுவதற்கு ஒரு விலை உண்டு. அதற்கான விலையை நாம் செலுத்தவேண்டும். நான் உன் (மகன்) முதுகில் ஆறுதல் கூறுகிறேன். சுதந்திர தேசத்தில் சந்திப்போம்” என்றார். இந்தியாவின் கோவிட் நரகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் செய்திப்படங்களை அவர் தயாரித்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x