Published : 27 Aug 2022 05:10 AM
Last Updated : 27 Aug 2022 05:10 AM
புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு தொடர்பான அரசு ஒப்பந்தத்தை தனக்கே ஒதுக்கீடு செய்ததற்காக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மூத்த தலைவர் ரகுவர் தாஸ் கடந்த பிப்ரவரியில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ஹேமந்த் சோரன், பாஜக தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது.
அதில் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ராஞ்சி திரும்பினார். தகுதி நீக்க நோட்டீஸை அரசு அறிவிப்பாணையில் ஆளுநர் வெளியிட்டதும், முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவர் இடைத்தேர்தல் மூலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்ந்தெடுக்கபட முடியும்.
இது குறித்து ஜார்க்கண்ட் மூத்த தலைவர் சர்யு ராய் கூறுகையில், ‘‘ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ., பதவிக்கு தகுதியில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை ராஜ்பவன் வெளியிட்டதும், முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும்’’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் ஆய்வு செய்து வருகிறார். இதுவிரைவில் அறிவிப்பாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ஹேமந்த் சோரனுக்கு தடை விதிக்கப்படவில்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிபுணர்களுடன், ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி, முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் உத்தரவுக்குப்பின், அவர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளார்.
தார்மீக அடிப்படையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ள பாஜக., சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 82 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சிக்கு 30 எம்எல்ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும் உள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான பாஜக.,வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT