Published : 27 Aug 2022 03:57 AM
Last Updated : 27 Aug 2022 03:57 AM

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். எனினும், ராகுல் காந்தியே நிழல் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராகுலின் தலைமையை பகிரங்கமாக எதிர்த்து மூத்த தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி, கடந்த 2019-ல் சிவசேனாவில் இணைந்தார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, 2020-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து, தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், கடந்த ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இருந்து விலகினார். உத்தர பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகினார். சமாஜ்வாதி ஆதரவுடன் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.

சோனியாவுக்கு பாராட்டு

இந்தப் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இணைந்துள்ளார். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள 5 பக்க ராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம் சோனியா காந்தியை பாராட்டி உள்ளார்.

‘ராகுல் காந்தி முதிர்ச்சி இல்லாமல், குழந்தைத்தனமாக செயல்படுகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கிழித்து எறிந்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார். இதன்காரணமாகவே கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடைந்தது’ என்று கடிதத்தில் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் முதல்வர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஆசாத், காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆசாத், விரைவில் புதிய கட்சியை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x