Published : 26 Aug 2022 08:07 PM
Last Updated : 26 Aug 2022 08:07 PM

உ.பி | மனைவியுடன் சண்டை - 80 அடி உயர மரத்தில் குடியேறிய நபர்

பிரதிநிதித்துவப் படம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் 80 அடி உயரம் கொண்ட மரத்தில் குடியேறியுள்ளார். சுமார் ஒரு மாத காலமாக அவர் அந்த மரத்தில் வசித்து வருகிறாராம். இந்த வேடிக்கையான சம்பவம் அங்குள்ள மவூ மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கணவன் - மனைவிக்கு இடையே லேசான சண்டைகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். சமயங்களில் அது அன்பின் மிகுதியால் கூட ஏற்படும். அதில் யாரேனும் ஒருவருக்கு கோபம் அதிகம் இருந்தால் பேசுவது, சாப்பிடுவது போன்றவற்றை நிறுத்தி விடுவார்கள். மீண்டும் அந்த சிக்கல் தீர்ந்ததும் சகஜ நிலைக்கு திரும்புவார்கள். ஆனால், இந்த நபர் கோபித்துக் கொண்டு மரத்தில் குடியேறியுள்ளார். அது பனை குடும்பத்தை சேர்ந்த மரம் என தெரிகிறது.

42 வயதான ராம் பிரவேஷ் தான் இந்த செயலை செய்துள்ளார். கடந்த 6 மாத காலமாக மனைவியுடன் அவர் மனக் கசப்பில் உள்ளாராம். தன்னை தனது மனைவி தாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் மரத்தில் குடியேறியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக அவருக்கு உணவு, குடிநீர் போன்ற அனைத்தும் கயிறு மூலம் அவரது குடும்பத்தினர் அனுப்பி வருகிறார்களாம்.

இயற்கை உபாதைகளுக்காக வேண்டி இரவு நேரங்களில் மட்டும் அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வருவதாக கிராமத்தினர் சிலர் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவரது இந்த செயலுக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்களாம். அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு இதனால் சங்கடம் ஏற்பட்டுள்ளதே எதிர்ப்புக்கான காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து கிராமத்தினர் போலீசாருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மரத்தில் வசிக்கும் அவரை பார்க்கவே அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் வண்டி வண்டியாக வந்து செல்வதாகவும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x