Published : 26 Aug 2022 09:40 AM
Last Updated : 26 Aug 2022 09:40 AM

பாரத் ஜோதோ யாத்திரையால் தள்ளிப்போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: செப்டம்பர் 20ல் நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாரத் ஜோதோ யாத்திரை காரணமாக தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி ஆன்லைன் சந்திப்பை நடத்துகிறது. அதில் தேர்தல் நடைமுறைகள் குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறது.

கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் தற்போது கட்சியின் கவனம் முழுவதும் பாரத் ஜோதோ யாத்திரையின் மீது உள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 7ல் தொடங்குகிறது. நாடு முழுவதும் அதாவது வடக்கே காஷ்மீரில் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை 3570 கிலோமீட்டர் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது. 5 மாதங்கள் இந்த பாதயாத்திரை நடைபெறும். 12 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.

ராகுலை விரும்பும் மூத்த தலைவர்கள்: காங்கிரஸ் தலைமைப் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவகள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், "நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பத்தை உணர்ந்து ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். அவர் அதனை ஏற்காவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றமடைவார்கள். நிறைய பேர் களப்பணியாற்றாமல் வீட்டிலேயே முடங்கிவிடுவார்கள். காங்கிரஸார் மனநிலையை உணர்ந்து ராகுல் தாமே முன்வந்து இந்த பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இது காந்தி குடும்பம், காந்தி குடும்பம் அல்லாதோர் போன்ற சர்ச்சைகளுக்கான நேரமில்லை. இது காங்கிரஸ் என்ற அமைப்பின் தேவை" என்றார்.

அசோக் கெலாட் இவ்வாறாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக விருப்பம் தெரிவித்துவரும் நிலையில் ராகுல் காந்தி கடைசி வரை இதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அசோக் கெலாட்டை தலைவராக்கவும் பரிசீலனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்குப் பொறுப்பேற்று அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x