Published : 26 Aug 2022 05:28 AM
Last Updated : 26 Aug 2022 05:28 AM
புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியே என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
வழக்கு தொடர்பான விவரங்கள் அடங்கிய நகலை (இசிஐஆர்)குற்றவாளிக்கு அமலாக்கத்துறை அளிக்கத் தேவை இல்லை, குற்றமற்றவர் என்பதை குற்றவாளிதான் நிருபிக்க வேண்டும், குற்றத்தைஅமலாக்கத்துறை நிருபிக்க தேவையில்லை போன்ற அம்சங்கள் அமலாக்கத்துறைக்கான அதிகாரத்தில் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டு விஷயங்களையும் மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு கூறியது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான தீர்ப்பை முழுவதுமாக மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மேலே கூறப்பட்ட இரண்டு விஷயங்களை மறு பரிசீலனை செய்வதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருந்ததால், இந்த இரண்டு அம்சங்கள் குறித்து நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றார்.
கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான ஒட்டுமொத்த தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யும்படி கூறினார். கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல், ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் கைது செய்வதற்கு அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கபில் சிபல் கூறினார்.
இசிஐஆர் நகல் எப்ஐஆர் போன்றதுதான், அதை குற்றம்சாட்டப்பட்டவர் பெற உரிமை உள்ளது என்ற கபில்சிபில் கூறியதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இது வழக்கு தொடர்பான உள் ஆவணம் என்பதால், ஒவ்வொரு வழக்கிலும் இசிஐஆர் நகல் வழங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என கூறியது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட இதர சிறப்பு அதிகாரங்களான கைது, பறிமுதல், வாரண்ட் இல்லாமல் சோதனை, விசாரணையின்போது அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிப்பது போன்றவற்றை நடைமுறையில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விசாரணைக்குப்பின் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT