Published : 26 Aug 2022 04:22 AM
Last Updated : 26 Aug 2022 04:22 AM
புதுடெல்லி: தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு அமைப்புகள் உளவு பார்ப்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டில் அரசியல் புயலை கிளப்பியது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், வழக்கறிஞர் சர்மா உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், புகார் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு அமைத்து கடந்த 2021 அக்டோபரில் உத்தரவிட்டது. இந்த குழுவுக்கு உதவ தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டது.
நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் விசாரணைக் குழு, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் வாசித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விசாரணைக் குழு தனது நீண்ட அறிக்கையை 3 பாகங்களாக சமர்ப்பித்துள்ளது. இதில் 2 பாகங்கள் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கைகள் ஆகும். மற்றொரு பாகம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான மேற்பார்வை குழுவின் அறிக்கையாகும்.
குடிமக்களின் அந்தரங்க உரிமையை பாதுகாக்கவும் தேசத்தின் இணைய பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத் திருத்தம் செய்யுமாறு அறிக்கையின் ஒரு பகுதி பரிந்துரைக்கிறது.
தொழில்நுட்பக் குழு அறிக்கையை பொறுத்தவரை, அக்குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை. 5 போன்கள் ஏதோ ஒரு மென்பொருளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவை பெகாசஸ் உளவு மென்பொருளால்தான் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இணைய பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளே 5 போன்களின் பாதிப்புக்கு காரணம் என தொழில்நுட்பக் குழு கூறியுள்ளது. விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. அறிக்கையை முழுமையாக ஆராயாமல் நாங்கள் வேறு கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழுவின் அறிக்கை பொதுவான அம்சங்களைக் கொண்டது. இந்த அறிக்கை அதன் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்கு பிறகு நீதிமன்றம் விசாரிக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT