Published : 18 Oct 2016 09:41 AM
Last Updated : 18 Oct 2016 09:41 AM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பூடான் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குப் பிறகு ‘பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் அவுட்ரீச் கூட்டம்’ நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கே ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
தற்போது சார்க் உச்சி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு சூழல்கள் உகந்ததாக இல்லை. இது தொடர்பான கவலையை அனைத்து உறுப்பு நாடுகளுமே வெளிப்படுத்தியுள்ளன. சூழ் நிலை சரியில்லாத போது, அதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பது தான் சரியானதாக இருக்கும். தீவிரவாதத்தால் பாதுகாப்பு சூழ்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தீவிர வாதத்தின் கொடூர வடிவமே எல்லை தாண்டிய தீவிரவாதம் தான்.
எந்தவொரு நாடும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அனுமதிக்காது. எந்த நாடு எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தூண்டி விடுகிறதோ, அதற்கான எதிர் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அந்த நாடு நிச்சயம் தெரிந்து கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களால் சார்க் உச்சி மாநாடு ஒத்திபோடப்பட்டிருப்பதே அந்த நாட்டுக்கு வலுவான தகவலாக அமைந்திருக்கும்.
தீவிரவாதத்தால் பாதிக் கப்பட்டதால் ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் சார்க் உச்சி மாநாட்டை புறக்கணித்த போது, அந்தப் பிரச்சினையே இல்லாத பூடான் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததற்கு இந்தியாவுடனான நட்பு தான் காரணம்.
நண்பருக்கு (இந்தியா) பிரச்சினை என்றால் அவருக்குத் தோள் கொடுப்பது தான் சிறந்த நட்பாக இருக்க முடியும். இந்தியாவுக்கு பூடான் எப்போதும் தோள் கொடுக்கும்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு முழு உரிமை இருக்கிறது. பாதுகாப்புக்காக இந்தியா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பூடான் முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT