Published : 25 Aug 2022 06:28 AM
Last Updated : 25 Aug 2022 06:28 AM
புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டையை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தியாவில் திருநங்கைகள் தொடர்பான விவகாரங்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருநங்கைகளை சமூகத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சகம் சார்பாக திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தாகியுள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, பயனாளி திருநங்கையாக இருக்க வேண்டும். அதேபோல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திருநங்கை சான்றிதழை வைத்திருக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் இந்த சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் டிஜி சுகாதாரக் காப்பீடு அட்டை என்று அழைக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு திருநங்கைக்கும் மருத்துவக் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் நிதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை வைத்துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் திருநங்கைகள் இலவச சிகிச்சை பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் திருநங்கைகள் பயன்பெற வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது. அவர்களது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் டிஜி சுகாதாரக் காப்பீடு அட்டை வழங்கப்படும். அவர்களது திருநங்கைகள் அடையாள அட்டையையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழின் வரிசை எண்ணையும் தேசிய திருநங்கைகள் இணையதளத்தில் மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது.
சுகாதார காப்பீடு அட்டை கோரி விண்ணப்பிக்கும் திருநங்கைகளுக்கு அவர்களது சான்றிதழ் எண்ணையும், அடையாள அட்டையையும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக ஊழியர்கள் சரிபார்ப்பர். சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பின்னர் அவர்களுக்கு சுகாதாரக் காப்பீடு அட்டை வழங்கப்படும். அவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சையை இதன்மூலம் பெற முடியும். இந்த அட்டையைப் பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள தகவலின்படி நாட்டில் 10,639 பேருக்கு திருநங்கைகள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8,080 பேருக்கு திருநங்கைகள் பிரத்யேக அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகள் சான்றிதழ் கேட்டு 2,314 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT