Published : 25 Aug 2022 07:24 AM
Last Updated : 25 Aug 2022 07:24 AM
பாட்னா: பிஹார் மாநிலத்தின் புதிய மெகா கூட்டணி அரசு, சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
பிஹார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய மெகா கூட்டணியை ஏற்படுத்தினார். இதையடுத்து பிஹார் முதல்வராக 8-வது முறையாக கடந்த 10-ம் தேதி நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார்.
அதன்பின் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு அதிகபட்சமாக 16 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தனது கட்சிக்கு 11 அமைச்சர்களை நிதிஷ்வைத்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்குஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவரும் அமைச்சராக்கப்பட்டார்.
இந்நிலையில் பிஹார் மாநில புதிய அரசு சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது. சட்டப்பேரவை தொடங்கியதும் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா பதவி விலகினார். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ‘‘பிஹாரில் அமைந்துள்ள புதிய கூட்டணி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கூட்டணி தொடரும்’’ என்றார்.
பாஜக எம்எல்ஏ தாரா கிஷோர் பிரசாத் பேசுகையில், ‘‘அரசியல் நம்பகத்தன்மையை நிதிஷ் குமார் இழந்துவிட்டார். சொந்த பலத்தால் முதல்வராக முடியாதவர், பிரதமராக ஆசைப்படுகிறார்’’ என கேலி செய்தார்.
பாஜக வெளிநடப்பு
243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் அரசுக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகபாஜக., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் நடந்தஓட்டெப்பில் நிதிஷ் குமார் 160 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
அதன்பின் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், ‘‘வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் என்னை மரியாதையுடன் நடத்தினர். ஏற்கெனவே எனக்கு முக்கியத்துவம் அளிக்காததால், கடந்த 2013-ம் ஆண்டில் பாஜக., உறவை துண்டித்தேன். பிஹார் மாநில வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் உறுதி எடுத்துள்ளது.
இந்த முடிவை எடுத்ததற்காக, நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2024-ம் ஆண்டு தேர்தலில் நாம் இணைந்து போராட வேண்டும் என நான் அனைவரையும் வலியுறுத்தினேன்’’ என்றார். பிஹார் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறும் என துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி அறிவித்தார்.
ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சோதனை
பிஹார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் சுனில் சிங், சுபோத் ராய், டாக்டர் ஃபையாஸ் அகமது மற்றும் அஷ்பக் கரிம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதலாவது ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, லாலு குடும்பத்தினர் மற்றும் வேண்டியவர்களுக்கு நிலத்தை கொடுத்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டு முறைகேடு நடந்தது.
இந்த ஊழல் தொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர்கள் வீட்டில் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. இந்த சோதனை குறித்து பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘ இதற்கு சட்டப்பேரவையில் பதில் அளிப்போம்’’ என்றார். ்கட்சி எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில், ‘‘இந்த சோதனையை எதிர்பார்த்தோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT