Published : 25 Aug 2022 05:36 AM
Last Updated : 25 Aug 2022 05:36 AM
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை உடைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. ஏற்கெனவே, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஏவி கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது பொய் வழக்குகளை பதிந்து நெருக்கடி கொடுத்தது. தற்போது, ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களை மிரட்டி வருகிறது.
மேலும், கட்சியை உடைக்க கோடிக்கணக்கில் லஞ்சம் தருவதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது. இது மிக தீவிரமான அரசியல் பிரச்சினை. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
இதனிடையே ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறியதாவது:
ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள்அஜய் தத், சஞ்சீவ் ஷா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு கட்சியை உடைக்க ரூ.20 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர். மேலும், கட்சியை உடைத்து இன்னும் பல எம்எல்ஏக்-களை அழைத்து வந்தால் ரூ.25 கோடி வரை தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிரட்டியும், லஞ்சம் கொடுத்தும் பல்வேறு மாநிலங் களில் அரசுகளை கவிழச் செய்து இருக்கலாம். ஆனால், இது டெல்லி. இந்த மக்கள் கேஜ்ரிவால் மீதான முழு நம்பிக்கையின் காரணமாகவே அவரை 3 முறை முதல்வர் பதவியில் அமர வைத்துள்ளனர். எனவே, பாஜகவின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
2021-22-ஆம் ஆண்டுக்கான புதிய மதுபான உரிம கொள்கையை அமல்படுத்தியதில் டெல்லி துணைமுதல்வரும் ஆம் ஆத்மி முக்கிய தலைவருமான மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியே வந்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும், முதல்வர் பதவி தரப்படும் என்று மணிஷ் சிசோடியாவிடம் பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாஜக மறுப்பு
தற்போது அதே பாணியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக லஞ்சம் கொடுக்க முன்வந்தாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக பிரச்சினைகளை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT