ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்காதது ஏன்? - கர்நாடக முதல்வர் பசவராஜ் கேள்வி

ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்காதது ஏன்? - கர்நாடக முதல்வர் பசவராஜ் கேள்வி

Published on

பெங்களூரு: கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் குறித்து லோக் ஆயுக்தாவிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கெம்பண்ணா கூறுகையில், ''கர்நாடக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் அரசின் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்கின்றனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினேன். அவர் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த பெலகாவியை சேர்ந்த‌ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை கொண்டார். அவரது புகாரின் எதிரொலியாக ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சம்பவத்துக்கு பிறகும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் கமிஷன் கேட்பதை நிறுத்தவில்லை. கர்நாடக தோட்டக்கலைத் துறை அமைச்சர் முனிரத்னா ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். அவர் மீது முதல்வர் பசவராஜ் பொம்மை அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும் 15 நாட்களுக்குள் தக்க ஆதாரங்களுடன் கடிதம் எழுத இருக்கிறோம்'' என்றார்.

இந்த விவகாரம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 சதவீத கமிஷன் புகாரை அமைச்சர் முனிரத்னா மறுத்துள்ளார். அதேவேளையில் கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் முனிரத்னாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ''ஒப்பந்ததாரர் சங்கத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த‌ ஆதாரமும் இல்லை. எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் காரணமாக அமைச்சர்கள் மீது அவதூறை பரப்பி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதாக கூறும் இவர்கள் ஏன் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளிக்கவில்லை? அங்கு புகார் அளித்தால் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in