Published : 25 Aug 2022 04:45 AM
Last Updated : 25 Aug 2022 04:45 AM

காங்கிரஸ் தலைவர் பதவி | ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு - தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவு?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். அவர் டெல்லி திரும்புவதற்கு முன் உடல்நலம் சரியில்லாத தனது தாயாரை சென்று பார்த்து வருவார். சோனியாவுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

தேதி தெரியவில்லை

சோனியா காந்தி எந்த தேதியில் வெளிநாடு செல்கிறார். எந்தெந்த இடங்களுக்கு அவர் பயணம் செய்கிறார் என்பது போன்ற விவரங்கள் அந்த அறிக்கையில் இல்லை என்றாலும் டெல்லியில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசவிருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரையை ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

28 காங். செயற்குழு கூட்டம்

வரும் 28-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த 2014, 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த ராகுல் காந்தி, தோல்விக்குத் தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகினார்.

அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் 23 பேர் கீழ் மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவி வரை உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

ராகுல் தொடர்ந்து மறுப்பு

இதனிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவும், தலைவர் தேர்தலில் போட்டியிடவும் ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் அப்பதவியை ஏற்க ஆர்வமில்லாமல் இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த குழப்ப நிலைக்கு முடிவு கட்ட சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 28-ம் தேதி சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. காணொலியில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்குவார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x