Published : 25 Aug 2022 05:14 AM
Last Updated : 25 Aug 2022 05:14 AM
ஃபரிதாபாத்: ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில், டெல்லி-மதுரா சாலையில் மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில், 130 ஏக்கர் நிலத்தில் 2,600 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை செயல் பாட்டுக்கு வந்துள்ளது. மருத்துவ மனை கட்டிடத்தின் மேல் மாடியில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது.
இந்த மருத்துவமனை, அடுத்த 5 ஆண்டில் இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும். இதை மாதா அமிர்தானந்த மயி முன்னிலையில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சுகாதாரம் மற்றும் ஆன்மிகம் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய நாடு இந்தியா. இங்கு சிகிச்சை சேவையாக மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்பமும், நவீன மயமும் ஒன்று சேர்ந்து, சுகாதாரத் துறையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த மருத்துவமனை நவீனமும், ஆன்மிகமும் கலந்த கலவை. இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் இடமாக மாறும். அன்பு, இரக்கம், சேவை மற்றும் தியாகத்தின் முழுஉருவமாக திகழ்பவர் அம்மா. அவர் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை வழிநடத்தி செல்கிறார்.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகளும் இதரஅமைப்பினரும் முன்வருவதை உறுதி செய்ய இந்தியா முயற்சிக்கிறது. இவ்வாறு மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT