Published : 16 Oct 2016 01:24 PM
Last Updated : 16 Oct 2016 01:24 PM

பொருளாதார வளமைக்கு நேரடி அச்சுறுத்தல் பயங்கரவாதமே: பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகள் தலைவர்கள் சந்திப்பில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஏற்றுமதி குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

“எங்களது பொருளாதார வளமைக்கு நேரடியான அச்சுறுத்தல் பயங்கரவாதமே. பயங்கரவாத ஏற்றுமதிக்கு தாயகம் இந்தியாவின் அண்டை நாடுதான்” என்று பாகிஸ்தானை மறைமுகமாகக் குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி.

பயங்கரவாதத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பிரிக்ஸ் தலைவர்களிடம் கோரிய பிரதமர் மோடி சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஒட்டுமொத்த உடன்படிக்கையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் சந்திப்பில் எல்லை கடந்த பயங்கரவாதம் ஒரு மைய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர், “உரி தாக்குதலை அடுத்து ரஷ்யா கடும் கண்டனங்களை தெரிவித்ததற்கு இந்தியா ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்தது. 17-வது இந்தியா-ரஷ்யா மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசினார். மசூத் அசாரை ஐ.நா. தடைப்பட்டியலில் கொண்டு வர முட்டுக் கட்டை போட்டு வரும் சீனாவைக் குறிப்பிட்டு சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி மசூத் அசாரை தடைப்பட்டியலில் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.”

ஆனால் சனிக்கிழமை சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டாலும் இருதரப்பினரிடையும் உடன்பாடின்மை தெரிந்தது. சார்க் மாநாட்டுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க ஜின்பிங் வலியுறுத்தினார்.

“சீனாவும் இந்தியாவும் தங்கள் அரசியல் கட்சிகளிடையே, உள்நாட்டு அரசுகளிடையே, சிந்தனையாளர்களிடையே, பண்பாட்டு அமைப்புகளிடையே, ஊடக நிறுவனங்களிடையே பரிமாற்றங்களை வளர்க்க இருதரப்பு நட்புறவுக்கான பொதுமக்கள் ஆதரவை உறுதிப்படுத்த வேண்டும். பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவு நல்க வேண்டும். பலதரப்பு சட்டகங்களில் இருநாடுகளும் கூட்டுறவை வளர்க்க பாடுபடவேண்டும். உதாரணமாக ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, பிராந்தியக் கூட்டுறவுக்கான தெற்காசிய கூட்டமைப்பு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றிற்கு இந்தியாவும் சீனாவும் கூட்டுறவாக செயல்பட வேண்டும்” அதிபர் ஜின்பிங் கூறியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x