Published : 24 Aug 2022 06:59 PM
Last Updated : 24 Aug 2022 06:59 PM

பிஹாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் அரசு வெற்றி; பாஜக வெளிநடப்பு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் தலைமையிலான மஹா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாஜக வெளிநடப்பு செய்தது.

அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார் மீண்டும் பிஹாரின் முதல்வரானார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தக் கூட்டணி ஆட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு புதன்கிழமை நடந்தது.

முன்னதாக, பகல் 2 மணிவரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதால் அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். சபையை துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி நடத்தினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் மீதமிருந்த 160 வாக்குகள் பெற்று நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். பிஹார் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 243 உறுப்பினர்களில் 164 பேர் நிதிஷ் குமாருக்கு ஆதரவளித்திருந்த நிலையில் இந்த வாக்கெடுப்பு சம்பிரதாயமாகவே நடந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிஹார் துணைமு தல்வர் தேஜஸ்வி யாதவ், “இந்த மகா கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி. இதன் இன்னிங்ஸ் என்றும் முடியாது. இது நீண்ட நாட்களுக்கு தொடரும். யாரும் இடையில் ரன் அவுட் ஆக மாட்டார்கள் என்று தெரிவித்தார். பாஜக உறுப்பினர் தாரா கிஷோர் பிரசாத்,
நிதிஷ் குமார் தனது அரசியல் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் சுனில் சிங், சுபோத் ராய், ஃபையாஸ் அஹமது, அஷ்ஃபக் கரீம் ஆகியோர் வீடுகளில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி சிபிஐ ரெய்டு நடத்தியது.

இதுகுறித்து சட்டப்பேரவை விவாதத்தில் போது அம்மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர், “நாட்டில் உள்ள அனைத்து சொத்தும் தேஜஸ்வியினுடையது என்று நிரூப்பிக்க முயற்சி செய்கிறீர்களா? ரயில்வேயை லாபத்தில் இயங்க வைத்தவர் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதனை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மற்றவர்களை பயமுறுத்தவே மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம், நீங்கள் பாஜகவுடன் நட்புடன் இருந்தால் ஹரிச்சந்திரன் என்றும், இல்லையென்றால் நீங்கள் குற்றவாளி உங்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஏவிவிடப்படும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை உருவாக்கி, பிஹாரின் 8 வது முறை முதல்வராக கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆர்டிஜேவின் தலைவர் தேஜஸ்வியாதவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. 31 பேர் கொண்ட அமைச்சரவையிலும், 16 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள், 11 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x