Published : 23 Aug 2022 06:05 AM
Last Updated : 23 Aug 2022 06:05 AM
ஹைதராபாத்: ‘‘தற்போது அரசியலுக்கு வர விருப்பமில்லை’’ என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், முனுகோடு சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று, தொடர்ந்து 3 இடைத்தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்ய பாஜக மும்முரமாக களம் இறங்கி உள்ளது. இதற்கான பிரச்சாரத் திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் தினம் ஹைதராபாத் வந்திருந்தார்.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் திறமையாக நடித்திருந்த நடிகர் ஜூனியர் என்டிஆரை அமித் ஷா சந்திக்க விரும்பினார். ஆதலால், அமைச்சர் அமித் ஷாவை நடிகர் ஜூனியர் என்டிஆர் நேற்று முன்தினம் இரவு சந்தித்தார். இருவரும் தனிமையில் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசினர். அப்போது ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வெகு சிறப்பாக நடித்துள்ளதாகவும் உடன் நடித்த ராம் சரணின் நடிப்பும் பிரமாதம் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் சீனியர் என்டிஆர் நடித்த ‘விஸ்வாமித்ரா’, ‘தான, வீர, சூர, கர்ணா’ உள்ளிட்ட படங்களை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றும் என்.டி.ராமாராவின் ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியதாகவும் அமித் ஷா கூறினார். மேலும் அரசியலுக்கு வர விருப்பமா? என அவர் கேட்டதற்கு, தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, "நடிகர் ஜூனியர் என்டிஆர் ஒருவேளை பாஜகவில் இணைந்தால், தெலங்கானாவில் அவர் மூலம் மேலும் பலமடையலாம் என பாஜக எதிர்பார்க்கிறது. அதே சமயம் ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சிக்கு மாற்றாக ஜூனியர் என்டிஆரின் நட்பை பெறுவதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குகளை பெற்று ஆந்திராவிலும் பலம் பெறலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் அமித் ஷா தனது சமூக வலைதளத்தில், “மிகச் சிறந்த நடிகர், தெலுங்கு சினிமாவின் மின்னும் வைரமான ஜூனியர் என்டிஆரை ஹைதராபாத்தில் சந்தித்து அவருடன் விருந்து சாப்பிட்டது மிகவும் மிகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT