Published : 23 Aug 2022 04:42 AM
Last Updated : 23 Aug 2022 04:42 AM

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சங்கத்தினர், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். மத்திய அரசின் சமரச பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, 2021-ம் ஆண்டு இறுதியில் இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

அதன் பிறகும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், எம்எஸ்பி உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதை அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சொந்த ஊர் திரும்பினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் கார் மோதியது அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் நீதி வழங்கக் கோரி சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) சார்பில் கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 72 மணி நேர போராட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் ஒரு நாள் போராட்டம் நடைபெறும் என பாரதிய கிசான் யூனியன் (பிகேயு), சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்-அரசியல்சாரா) உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். ஆனாலும், நேற்று காலை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாகனங்களில் டெல்லியை நோக்கி வந்தனர். வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். இதனால் டெல்லி எல்லைப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

லக்கிம்பூர் கெரி சம்பவத்துக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். மத்திய அரசு அளித்த வாக்குறுதிப்படி, விளைபொருட்களுக்கு எம்எஸ்பி கிடைப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும். விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x