Published : 22 Aug 2022 11:20 PM
Last Updated : 22 Aug 2022 11:20 PM
மும்பை: பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்துவரும் வீடியோ வைரலாக, அவருக்கு உதவுவதாக ஜொமோட்டோ அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், ஜொமோட்டோவில் வேலைசெய்து வந்த தந்தை விபத்தில் காயமடைந்ததால், குடும்பத்தைக் காப்பாற்ற, தந்தையின் வேலையைப் பார்த்த பள்ளிச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது. இப்போது அதேபோன்று இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது. சௌரப் பஞ்வானி என்பவர், ஒரு பெண் டெலிவரி ஏஜென்ட் தனது கைக்குழந்தையுடனும், அதேபோல் இரண்டு வயது மதிக்கத்தக்க தனது மூத்த ழந்தையுடனும், உணவு டெலிவரி செய்து வருவது தொடர்பாக பகிர்ந்துள்ளார்.
அதில், அந்தப் பெண் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டே உணவு டெலிவரி செய்ய செல்கிறார். சௌரப் பஞ்வானி, அந்த பெண்ணிடம் சில கேள்விகளை கேட்க, பிரசவத்துக்கு பிறகு தனது கைக்குழந்தையுடன் டெலிவரி வருவதாக அதற்கு பதிலும் கொடுக்கிறார்.
இதனையடுத்து, “அவரைப் பார்த்து நான் மிகவும் உத்வேகம் அடைந்தேன். அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் நாள் முழுவதும் வெயிலில் உணவு டெலிவரி செய்துவருகிறார். ஒரு நபர் விரும்பினால், அவரால் எதையும் செய்ய முடியும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சௌரப் பஞ்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலானது. 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
அதேநேரம், ஜொமோட்டோ நிறுவனம், சம்பந்தப்பட்ட பெண்ணின் குழந்தை பராமரிப்பு நலன்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளது. இதற்காக, சௌரப் பஞ்வானியிடம்அந்த பெண் ஊழியரின் விவரங்களை கேட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT