Published : 21 Aug 2022 05:55 PM
Last Updated : 21 Aug 2022 05:55 PM
இமாச்சல் பிரதேச காங்கிரஸின் வழிகாட்டுதல் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா விலகியுள்ளார்.
கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி23 குழுவிலிருந்து அடுத்தடுத்து பெருந்தலைகள் விலகுவது காங்கிரஸில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களை பொதுவாக ஜி-23 அல்லது, 23 பேர் குழு என்று அழைப்பர். இதில், கட்சியின் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, மனிஷ் திவாரி, சசி தரூர், ராஜ் பாபர், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் எனவும், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இவர்களில் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகினார். இந்நிலையில் அண்மையில் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஹிமாச்சலப் பிரதேச கட்சி வழிகாட்டுதல் குழுத் தலைவர் பொறுப்பை ஆனந்த் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.
அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில் கனத்த இதயத்துடன் நான் மாநில வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் இப்போதும் மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் வாழ்நாள் முழுவதுமே காங்கிரஸ்காரன் தான். காங்கிரஸ் சித்தாந்தமே என் ரத்தத்தில் பாய்கிறது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனாலும் தொடர்ச்சியாக கட்சியில் எனக்கு நடக்கும் புறக்கணிப்புகள், அவமானங்கள் என் சுயமரியாதையை புண்ணாக்குக்கின்றன. அதனால் வேறு வழியே இன்றி நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT