Published : 21 Aug 2022 08:28 AM
Last Updated : 21 Aug 2022 08:28 AM
திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம், கோலாழி பகுதியைச் சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் மேனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு ப்ரீத்தி, பிரசீதா என இரு மகள்கள் உள்ளனர். ப்ரீத்திக்கு திருமணமாகி இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
தனது தாய் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்த இளைய மகள் பிரசீதா அவருக்கு மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தாயை சம்மதிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து ரதிமேனனுக்கும், மண்ணுத்தி பாட்லிக்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரனுக்கும் திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை மகள் பிரசீதா முன்னின்று நடத்தி வைத்தார்.
இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் அவர் கூறியதாவது:
நான் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். கரோனா காலக்கட்டத்தில் இணையவழியில் பாடங்கள் நடத்தினேன். அதனால் அம்மாவின் அருகிலேயே இருந்ததால் அவர் தனிமையை உணராமல் பார்த்துக்கொண்டேன். கரோனா நடைமுறைகள் முடிவுக்கு வந்து நேரடி வகுப்புகள் தொடங்கியதும் என் அம்மா தனிமையில் தவிப்பதை உணர்ந்தேன். அவருக்கு உணவு ஒவ்வாமை, செரிமானப் பிரச்சினை ஆகியவையும் ஏற்பட்டன. அவர் சோகத்திலேயே இருப்பதால் உளவியல் ரீதியான உடல்நலப் பிரச்சினை ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.
அம்மாவின் தனிமையைப் போக்க மறுமணம் செய்து வைக்க முடிவுசெய்தேன். என் கணவர் வினீஷ் மோகனும் இதற்கு ஆதரவுதந்தார். இதை எனது அம்மா ஏற்கவில்லை. முதியோர் இல்லத்துக்கு செல்வதில் உறுதியாக இருந்தார். நானும், கணவரும் சமூகப் பார்வையை மிஞ்சிய தனிமனித சுதந்திரத்தையும், வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கைத்துணை தேவை குறித்த அவசியத்தையும் சொல்லி சம்மதிக்க வைத்தோம். இந்தத் திருமணத்தின் மூலம் என் அம்மாவை மீண்டும் இளமையாகப் பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT