Published : 19 Aug 2022 10:30 AM
Last Updated : 19 Aug 2022 10:30 AM
புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
இன்று காலை முதல் சிசோடியாவின் வீடு உட்பட மொத்தம் 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான விதிமீறல் புகாரை அடுத்து, இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, டெல்லி அரசின் முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூ இல்லத்திலும் சோதனை நடக்கிறது.
சோதனையை அடுத்து மணீஷ் சிசோடியா பகிர்ந்த ட்வீட்டில், "சிபிஐ எனது வீட்டில் சோதனை செய்கிறது. அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். எனக்கு எதிராக எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
பின்னணி: கடந்த மாத (ஜூலை) தொடக்கத்தில், டெல்லி தலைமைச் செயலர் பதிவு செய்த புகாரில் ஜிஎன்சிடிடி சட்டம் 1991, தொழில் பரிவர்த்தனை விதி (டிஓபிஆர்)-1993, டெல்லி உற்பத்தி வரி சட்டம் -2009, டெல்லி உற்பத்தி வரி 2010 ஆகியன முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
உற்பத்தி வரித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
லைசென்ஸ் வழங்குவதில் புதிய நடைமுறை மூலம் மதுபான விற்பனை டெல்லி அரசிடமிருந்து கைமாறி நான்கு கார்ப்பரேஷன் வசம் சென்றது. இந்த நான்கு கார்ப்பரேஷன் பகுதியில் மொத்த மது விற்பனையில் 50 சதவீத விற்பனை நடைபெறுகிறது. இவை அனைத்தும் தனியார் வசம் விடப்பட்டது. இந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சிபிஐ ரெய்டு சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நடந்து வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் ரியாக்ஷன்: சிபிஐ ரெய்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லி மாடல் கல்வியை பாராட்டி, அதற்கு உழைத்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் புகைப்படம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளான நியூயார்க் டைமிஸில் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு நாங்கள் சிபிஐ-யை வரவேற்கிறோம்.
நாங்கள் இந்த ரெய்டுக்கு நன்றாக ஒத்துழைப்போம். எனினும், இந்த ரெய்டால் ஒன்றும் வெளிவரப்போவதில்லை. கடந்த காலங்களிலும் பல சோதனைகள் நடந்துள்ளன. எதுவும் வெளிவரவில்லை. அதேபோல், இப்போது மீண்டும் எதுவும் வெளியே வராது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT